சாலையோர உணவகத்தில் இன்று (31 ஜனவரி 2024) இட்லிப் பொட்டலம் வாங்கினேன். சாப்பிட்டபின் பொட்டலத்துச் செய்தித்தாளில் இருப்பதை வாசிப்பது என் வழக்கம். அது, 8. 10. 2023 ஆம் தேதிய மதுரை தினமலர் நாளிதழ். அதிலுள்ள ஒரு செய்தி இரத்தக்குழாய் ஊசி தொடர்பானது. பொதுவாக நாம் எல்லோரும் இரத்தக்குழாய் ஊசி என்பதை, தவறாக, நரம்பு ஊசி என்கிறோம். vein என்பது சிரை ஆகும். இது ஒரு இரத்த நாளம். பிராண வாயு குறைந்த குருதியை (ஆக்சிஜன் குறைவாயுள்ள இரத்தத்தை) இது நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும். இது நரம்பு அல்ல. தசையில் ஊசி போடுவதைப்போல இந்தக் குழாயிலும் ஊசி போடுவார்கள். எல்லா ஊசிகளையும் இதில் போட்டுவிட மாட்டார்கள். இதில் ஊசி போட்டால் ஊசி மருந்து வேகவேகமாகப் பயனளிக்கும். ஆகவே, அறிஞர்கள் தயவுசெய்து மக்களுக்கும் மீடியாவுக்கும் அறிவுறுத்தி நரம்பு ஊசி என்பதை சிரை ஊசி என்றோ, இரத்தக்குழாய் ஊசி என்றோ குருதி நாள ஊசி என்றோ அல்லது வேறு சரியான பெயரில் சொல்ல அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.